மு.வீரபாண்டியன் 
தமிழ் நாடு

வந்தே மாதரத்தை முதலில் பாடுவதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்

Staff Writer

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வந்தேமாதரம் பாடல் முதலில் பாடப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அந்த விழாவைப் புறக்கணித்துள்ளார். இது வரவேற்பிற்குரியது.

இருப்பினும் தமிழ்நாடு அரசின் பல்கலைக் கழகம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வழிகாட்டலை பின்பற்றாமல், ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் ஆலோசனை அடிப்படையில் செயல்படுவது ,உயர்கல்வியில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோகிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரின் இச்செயல் கண்டிக்கத்தக்கது. அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய கவிஞர் மனோன் மணியம் சுந்தரனார் பெயரில் அமைந்துள்ள, பல்கலைக் கழகத்திலேயே, தமிழுக்கு முதன்மை இடம் கிடைக்கவில்லை என்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

"வந்தேமாதரம் " ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பு உடையதாகவும், சில வரிகள் முஸ்லீம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாகவும் உள்ளதால்,அப்பாடலை   தேசிய கீதமாக ஏற்கக் கூடாது  என விடுதலை இயக்கக் காலத்திலேயே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகை நிர்வாகத்தின் உத்தரவுப்படி, பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலில் "வந்தேமாதரம்" பாடலுக்கு முதலிடம் வழங்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் நிலையில் வைத்தது மரபை மீறிய செயலாகும்.

ஒன்றிய அரசு அரசு நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு மாநிலத்தின் பாடல்களை முதலில் பாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள நிலையிலும் கூட ,தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தமிழை மூன்றாம் நிலைக்கு தள்ளச் செய்தது என்பது அவரது தமிழ் ,தமிழர் விரோத மனநிலையை  வெளிப்படுத்துகிறது .

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.” என்று மு. வீரபாண்டியன் கூறியுள்ளார்.