மு. வீரபாண்டியன், சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் 
தமிழ் நாடு

ஜெம் வீரமணி விவகாரம்- மற்றவர்களையும் கைதுசெய்க: வீரபாண்டியன்

Staff Writer

ஜெம் வீரமணியின் பாலியல் கொடூரத்திற்கு துணை போனவர்கள், உதவியவர்கள், புகாரை அலட்சியப்படுத்த அழுத்தம் கொடுத்தவர்கள் அனைவருக்கும் கடும் தண்டனை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“ ‘ஜெம்‘ கிரனைட்ஸ் முதலாளி வீரமணி ஏழு முதல் 13 வயது வரை உள்ள ஆதரவற்ற சிறுமியர்களை ஏமாற்றி, பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூரக் குற்றச் செயல்களுக்கு அவரிடம் 23 ஆண்டுகள் உதவியாளராக இருந்த, கணேசன், சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் மட்டுமே காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச் செயல்களுக்கு உதவியவர்கள், கவனத்துக்கு வந்து நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்

இக்குற்றம் தொடர்பான ‘வீடியோ’க்கள் அடங்கிய பென் டிரைவ்களை காவல்துறை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு அரசு இவ்வழக்கை மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையுடனும் கையாண்டு வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய எந்த குற்றவாளியும் தப்பிவிடாத வகையில் அனைத்து ஆதாரங்களையும் திரட்டி, நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனைகளை பெற்றுத்தர வேண்டும்.” என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.