மென்பொருள்  
தமிழ் நாடு

காந்தி பிறந்த நாளில் தனியார் நிறுவனங்கள் இயங்குவது சட்டவிரோதம்!

Staff Writer

தேசிய விடுமுறை நாளான மகாத்மா காந்தி பிறந்தநாளில் தனியார் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்குவது தொழிலாளர்களின் உரிமைகளுக்கு எதிரானதாகும் என்றும் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

” தேசிய விடுமுறை நாளான மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தனியார் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஐடி நிறுவனங்கள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 1958-ஆம் ஆண்டு தேசிய, பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைச் சட்டத்தின்படி இது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட வேண்டும்.

மாறாக தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இயங்க வேண்டுமென்றால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு இந்நாளில் முழு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது சட்டப்பூர்வமான உரிமையாகும்.

குறிப்பாக சென்னையிலும், கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களிலும் தனியார் நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய சட்டங்களை மதிக்காமல், உற்பத்தி மற்றும் லாபத்தையே முதன்மைப்படுத்தும் தனியார் தொழில் நிறுவனங்களின் இத்தகைய அணுகுமுறை கண்டனத்திற்குரியது.

தேசிய விடுமுறை நாளில், தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள், சட்டத்தின் பிரிவு 5(2)-ன்படி, உரிய முன் அறிவிப்பு வழங்குவதோடு, இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த உரிமை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் மூலம் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கும் பொருந்தும். எனவே, தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட வேண்டும்.

தேசிய விடுமுறை நாளில் இயங்கிய அனைத்து தொழிற்சாலைகளிலும், தொழில் நிறுவனங்களிலும் உடனடியாகச் சிறப்புத் தொழிலாளர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தேசிய விடுமுறை நாளான்று இயங்கும் நிறுவனங்கள் சட்டரீதியான முறையில் இயங்குகின்றனவா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த, தற்காலிக மற்றும் அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தகுதியுடைய தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டிய இரட்டிப்பு ஊதியம் அல்லது மாற்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை உறுதி செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர்களின் வருகைப் பதிவேடுகள், ஊதியப் பதிவேடுகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் ஆவணங்களை ஆய்வு செய்து, தொழிலாளர்கள் எவரது உரிமையும் மறுக்கப்படவில்லை என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

தேசிய விடுமுறை நாள் என்பது அரசின் அறிவிப்பில் இடம்பெறும் ஒரு நாளாக மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அது தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமையாகும்.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மதிக்க வேண்டும்; பொறுப்பேற்க வேண்டும். இதை உத்தரவாதப்படுத்துவது அரசின் கடமை.

சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்குத் துணைபோகாமல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு  அரசு  உடனடியாக, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.” என்று  மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.