சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் 
தமிழ் நாடு

குமரி மாற்றுத்திறனாளி சிறையில் அடித்துக் கொலை - நீதிவிசாரணை கோரும் மு.வீ.

Staff Writer

குமரி மாவட்டத்தில் குட்கா விற்ற மாற்றுத்திறனாளி சிறையில் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிவிசாரணை நடத்தவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

”கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (வயது 35). இவர் 200 கிராம் குட்கா விற்பனை செய்ததாகக் கூறி போலீசாரால் கடந்த ஜூலை 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூலை 13 ஆம் தேதி சிறையிலேயே இறந்துள்ளார்.

அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என காவல்துறை கூறுகிறது. ஆனால் மாற்றுத்திறனாளியான அவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் எனவும், அவரது உடலில் காயங்கள் உள்ளதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.எனவே, அவரது மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். உடற் கூறாய்வு நேர்மையான முறையில் நடப்பதை உறுதி செய்திட வேண்டும்.சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தால் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். காவல் மரணங்கள் நிகழாமல் தடுத்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.” என்று மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.