மத்திய அரசின் பட்ஜெட் மக்கள்விரோதமாக இருக்கிறது எனக் கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. இதற்கு தமிழக மக்கள் பேராதரவு தர சிபிஐ(எம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.
“ ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்க மறுப்பு, 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி, குடிநீர் இணைப்பு நிதி எதையும் விடுவிக்காதது, ரயில்வே உள்ளிட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காதது, கிராமப்புற மக்கள் பயன்பெறும் 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டி 100 நாள் வேலையே இனி இல்லாமல் செய்து ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது, மதுரை, கோவை மெட்ரோ திட்டம் அனுமதி மறுப்பு, உரிய வரி பங்கீடு தராமை என தமிழகத்தையும், தமிழக மக்களையும் புறக்கணித்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது. அமெரிக்காவிலிருந்து விவசாயப் பொருட்கள் எந்த வரியும் இல்லாமல் இறக்குமதி செய்து விற்க அனுமதி அளித்து உள்நாட்டு விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கையும், தேச விரோத நடவடிக்கைகளையும் கேட்க திராணியற்ற அஇஅதிமுக ரெய்டுகளுக்கு பயந்து தனது சுயநலன்களுக்காக பாஜகவிடம் சரணாகதி அடைந்துள்ளது.” என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்றைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
”ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்தும், தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்கவும், ரயில்வே உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட கோரியும் நாளை 12.02.2026 தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பகுதி மக்களும் பெருவாரியாக கலந்து கொண்டு கண்டன குரலெழுப்பிட வேண்டும்.” என்றும் பெ. சண்முகம் கூறியுள்ளார்.