வெனிசுலா நாட்டில் திடீர்த் தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிகோலா மதுரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்கப் படை கைதுசெய்தது. இது இறையாண்மையை மீறும் செயல் என்று ரஷ்யா, சீனா, ஈரான் முதலிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. அமைப்பு அமெரிக்காவின் அடாவடித்தனத்தைச் சாடியுள்ளது.
இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இ.கம்யூ. மார்க்சிஸ்ட் கட்சி, இ.கம்யூ. மா-இலெ கட்சி விடுதலை உட்பட்ட கட்சிகளின் சார்பில் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- மார்க்சிஸ்ட் சார்பில் அதன் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.இராமகிருஷ்ணன் தலைமையில் இன்று காலையில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தை முற்றுகையிடச் சென்றனர்.
அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், தடையை மீறி அவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.