ஜெம் கிரானைட்ஸ் வீரமணி 
தமிழ் நாடு

எப்ஸ்டீன் பைல்ஸ் போல ஜெம் வீரமணி விவகாரம்- ஜி.ராமகிருஷ்ணன்

Staff Writer

அமெரிக்காவின் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளை ஒத்த கொடூரமான சம்பவம் ஜெம் வீரமணி வழக்கு  என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகக் குறிப்பு:

”தொழிலதிபரான ஜெம் வீரமணி தற்போது போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

06.10.2025 அன்று, காவல்துறைக்கு வீடியோ ஆதாரங்களுடன் இந்த பாலியல் கொடூரங்கள் தொடர்பாக புகார் தரப்பட்டது. அதன் மீது அடுத்த நாளே போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அன்றைய காவல்துறை அதிகாரிகள் ‘விசாரணை’ செய்து, போதிய ஆதாரங்கள் இல்லை என்று காரணம் கூறி 2026 பிப்ரவரி மாதத்தில் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை கைவிடப்படுவதாக (further action dropped) நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்துள்ளனர்.
2026, ஜூலை மாதத்தில் போக்சோ நீதிமன்றம், மீண்டும் விசாரணையை மேற்கொள்ளும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தற்போதைய தவெக அரசு விசாரணையை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஜெம் வீரமணியும், குற்றத்தில் தொடர்புடைய சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மேலும் சில கேள்விகள் உள்ளன:

• வழக்கை முடித்து வைப்பது என்று போக்சோ நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது – துறையின் உயர் அதிகாரிகள் எப்படி அதற்கு ஒப்புக் கொண்டார்கள்?
• அன்றைய திமுக அரசு, இந்த வழக்கின் விசாரணையை தொடர வேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை?
• 2019 ஆம் ஆண்டே நடைபெற்ற இந்த குற்றச் சம்பவம் பற்றி, அப்போதிருந்த அதிமுக ஆட்சி என்ன செய்தது?

இனியாவது, தமிழ்நாடு அரசு - 2026 பிப்ரவரி மாதத்தில், இந்த வழக்கை முடித்து வைத்த காவல்துறை அதிகாரிகள் மீதும், அதற்கு ஒப்புதல் வழங்கிய உயர் அதிகாரிகள் மீதும் போக்சோ சட்ட அடிப்படையிலும் /வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரைவாக - தீர விசாரணை நடத்தி, குழந்தைகள் மீதான கொடும் வன்கொடுமையை நடத்திய, துணைபோன அனைவரும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதுடன் கடும் தண்டனையை உறுதி செய்திட வேண்டும்.” என்று ஜி.இராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.