சட்டப்பேரவைத் துணைத்தலைவர் இரவிசங்கர் 
தமிழ் நாடு

அத்துமீறிய துணைசபாநாயகர், எம்.எல்.ஏ.; துணைபோன போலீஸ்- சிபிஎம் சாடல்

Staff Writer

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.அர்ச்சுனன் தலைமைவகித்தார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஒரு பெண்ணிடம் கூறத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏற்கனவே ஒருமுறை அப்படி நடந்ததாகவும் அது குறித்து முதலமைச்சர் அலுவலகம் அவரை எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு மீண்டும் அதே போன்ற ஒரு நிகழ்வு நடந்திருப்பதாக தெரிகிறது. இது உண்மையில் கடுமையான பிரச்சனையாகும். மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள ஒருவரிடமே சட்டமன்ற உறுப்பினர் இப்படி நடந்து கொள்கிறார் என்பது பெண்கள் மீதான பிற்போக்குத்தனமான ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு. குழந்தைகளும், பெண்களும் கடுமையாக பாலியல் வன்கொடுமைக்கும், சீண்டல்களுக்கும் உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள சூழலில், ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவதும், அவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் தவறுகளுக்கு அரசாங்கமே துணை போவதாக ஆகிவிடும். அநாகரீகமான வார்த்தைகளால் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவருக்கே தொந்தரவு என்று செய்திகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய தவறுகள் ஆரம்பத்திலேயே சரி செய்யப்படவில்லை என்றால் மிகப்பெரிய கேடுகளாக மாறும் ஆபத்து உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு உரிய முறையில் விசாரித்து இது உண்மை எனும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது. 


இதைப்போலவே, “ துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான எம்.ரவிசங்கர் தன்னிடம் தொகுதி பிரச்சனைகள் குறித்து முறையிட வந்த ஒருவரை தாக்கியதாக காணொளிகள் வெளியாகி உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்தவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ‘தாக்குதல் எதுவும் நடக்கவில்லை’ என்று சொல்ல நிர்பந்தித்து காணொளி வெளியிடச் சொன்னதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காவல் ஆய்வாளர் ஒருவரே உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார். இந்தப் பின்னணியில், அவர் மது கடைக்கு சென்றார் என்று காவல்துறை காணொளி வெளியிட்டது எந்த வகையிலும் பொருத்தமான நடவடிக்கை இல்லை. காவல்துறை ஆளும் கட்சிக்கு ஆதரவாக நடந்து கொள்கிறது என்று எண்ணுவதற்கு எல்லா வாய்ப்பும் உள்ளது. 
எனவே, இந்தப் பிரச்னையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி தவறு செய்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரின் அத்துமீறல்களுக்கு துணை போன காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளதாக மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.