தமிழ் நாடு

காங்கிரசுக்கு மட்டும் கூடுதல் தொகுதிகளா? - சிபிஎம் கட்சி கொதிப்பு

Staff Writer

காங்கிரசுக்கும் தே.மு.தி.க.வுக்கும் மட்டும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவதா என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தத்துவ மேதை காரல் மார்க்சின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை, எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் மலர் மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் பெ.சண்முகத்திடம் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, காங்கிரசுக்கும் தே.மு.தி.க.வுக்கும் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவே; இரட்டை இலக்கத்தில் போட்டி என்றது என்ன ஆயிற்று என ஒருவர் கேட்டதற்கு, சண்முகம் விளக்கம் அளித்தார்.

”கூட்டணியில் புதிய கட்சிகள் வந்துள்ளதால் கூடுதல் தொகுதிகள் ஒதுக்குவது சிரமம் என தி.மு.க. தரப்பு கூறியது. இதே சிரமத்துக்கு இடையில்தான் காங்கிரசுக்கும் தே.மு.தி.க.வுக்கும் கூடுதல் தொகுதிகள் தர வாய்ப்பிருக்கிறபோது, இடதுசாரிகளுக்கு மட்டும் தரமுடியாது எனச் சொல்வதற்கான நியாயம் இல்லை. எனவே, கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதுதான் எங்கள் முடிவு.” என்று பெ.சண்முகம் கூறினார்.

குறைவான தொகுதிகளை ஒதுக்கினால் என்ன செய்வீர்கள் என்று மற்றொருவர் கேட்டதற்கு, அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மாநிலக் குழுவைக் கூட்டி முடிவுசெய்வோம் என்றார் பெ.சண்முகம்.