பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ(எம்) கட்சி வலியுறுத்தியுள்ளது.
அப்துல்கலாமின் முன்னாள் உதவியாளர் பொன்ராஜ், விஜய் கட்சி பெண்களை விலைமாதர்கள் என மிக மோசமாகக் குறிப்பிட்டது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில் பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நடிகர் விஜய் நேரடியாக காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
“பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கக் கூடிய விதத்திலும் பிற்போக்கு ஆணாதிக்கக் கருத்துக்களை முன்வைப்பது, குறிப்பாக பொதுவெளியை, இணையத்தை அதற்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது. அதுவும் தேர்தல் நடக்கவுள்ள பின்னணியில், அரசியல் கட்சிகளை விமர்சிப்பது என்கிற பெயரில், பெண் தலைவர்களை, உறுப்பினர்களை, ஆதரவாளர்களை இழிவுபடுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது பெண்களைப் பாலியல் பண்டமாகக் கருதும் அப்பட்டமான ஆணாதிக்கக் கண்ணோட்டம் மற்றும் கண்ணியக் கொலை என்பதோடு, பெண்களை அச்சுறுத்தி அரசியலில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சி. மேலும் அரசியல் என்கிற மிக முக்கியமான தளத்தின் தரத்தை சிதைக்கும் நடவடிக்கையாகும்.
பாலின சமத்துவம் அரசமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சமாகும். தேர்தல் நடத்தை விதிகள் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கண்ணியமற்றுப் பேசுவதை அனுமதிக்கவில்லை. எனவே, இத்தகைய பேச்சுகள், தேர்தல் நடத்தை விதிகளை பகிரங்கமாக மீறுவதாகும். இது க்ஷசூளு சட்டப் பிரிவு 79ன் அடிப்படையில் கிரிமினல் குற்றமாகும். கொள்கையின் அடிப்படையில் விமர்சிக்கும் தகுதியின்மையும், இயலாமையும், போதாமையுமே இதில் வெளிப்படுகிறது. பேசுவதையெல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் முடிந்து விடக்கூடிய விஷயமல்ல இது.
எனவே, பெண்கள் குறித்த கண்ணியமற்ற இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், கட்சி வித்தியாசம் இல்லாமல் இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமெனவும், கட்சி தலைவர்கள் பேசினால் அரசியல் கட்சிகளின் தலைமை சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்துகிறது.” என்று சண்முகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.