புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மலையூர் அருகே உள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 37 வயதான வாய்பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி பெண் கடந்த 17.5.2026 அன்று அரிசி ஆலையில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது வழிமறித்து, கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இந்த கொடூரமான கூட்டு பாலியல் வன்கொடுமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணை அருகில் இருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டு தற்போது புதுக்கோட்டை ராணியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
“இந்த கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக அறிவித்திருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வகையில் சட்டத்திற்கு முன் அவர்களை நிறுத்தி வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை பெற்றுக் கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க காவல்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மேலும், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உயர்தரமான சிகிச்சை அளிப்பதோடு, ரூபாய் 20 லட்சம் இழப்பீடும், தகுதியின் அடிப்படையில் அவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாற்றுத்திறனாளி பெண்ணை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தோழர் எஸ். சங்கர், பிற தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.