சென்னையில் இருந்து கோவைக்கு கனிமொழி எம்.பி., பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் ஆகியோர் ஒரே விமானத்தில் பயணம் செய்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், காரணம் பேட்டையில் நேற்று மாலை நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாட்டில் பங்கேற்க திமுக மாநில மகளிரணிச் செயலர் கனிமொழி, மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் டாக்டா் கனிமொழி என்.வி.என்.சோமு ஆகியோர் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தனர்.
இவர்கள் பயணித்த அதே விமானத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வரும் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக மலுமிச்சம்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அந்தக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் கோவைக்கு வந்தாா்.
அப்போது, மூவரும் விமானத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த கனிமொழி எம்.பி., மாற்றுக் கருத்துகள் மத்தியில் மலர்ந்த புன்னகை என மகளிர் மாநாட்டு தலைப்பையே ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்,”சீட்டை காலி செய்து எழுந்து நிற்க வைத்து விட்டீர்களே டாக்டர். இனி சீட்டு கிடையாது என்பதை சிம்பாலிக்காக சொல்லி விட்டீர்களே டாக்டர்” என பதிவிட்டுள்ளார்.