அமெரிக்காவில் உயிரிழந்த கடலூர் மாவட்ட மாணவர் அருண் சீனிவாசனின் உடலை தமிழகம் கொண்டுவர முதலமைச்சருக்கு த.வா.க. தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஒரு ஏழ்மைக் குடும்பத்தின் நம்பிக்கையாகத் திகழ்ந்து, உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற மாணவர் அருண் சீனிவாசனின் தற்கொலைச் செய்தி எங்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி, லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகன் அருண் சீனிவாசன். திருச்சியில் தனது இளங்கலை படிப்பை முடித்துவிட்டு, வறுமையின் பிடியில் இருந்து தன் குடும்பத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு அமெரிக்கா சென்றார். போஸ்டனில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் MS Robotics படிப்பை அண்மையில்தான் நிறைவு செய்திருந்தார்.
துரதிர்ஷ்டவசமாக, கடந்த 08/02/2026 அன்று கலிபோர்னியாவில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அக்குடும்பத்தை நிலைகுலையச் செய்துள்ளது.” என்று கூறியுள்ளார்.
”தற்போது அவரது உடல் சான் லோரென்சோவில் உள்ள ஒரு தனியார் சவக்கிடங்கில் (Chapel & Mortuary, Inc.) வைக்கப்பட்டுள்ளது.
அருணின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு சுமார் 40 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டியில் வசிக்கும் அவரது ஏழ்மையான பெற்றோரால் இந்தத் தொகையை திரட்டுவது என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்று. ஈன்ற மகனைப் பறி கொடுத்த துயரத்தில் இருக்கும் அந்தப் பெற்றோருக்கு, அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கக் கூட இயலாத இந்த நிதி நெருக்கடி பேரிடியாக அமைந்துள்ளது.
முதலமைச்சர், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, அயலகத் தமிழர் நல ஆணையம் மற்றும் இந்தியத் தூதரகம் வாயிலாக அருண் சீனிவாசனின் உடலை அரசு செலவிலேயே தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு ஏழைத் தமிழ் மாணவனின் உடல் அந்நிய மண்ணில் கேட்பாரற்றுக் கிடப்பதை தடுத்து, அவரது சொந்த மண்ணில் நல்லடக்கம் செய்ய தாங்கள் கருணை உள்ளத்தோடு ஆவன செய்ய வேண்டும்.” என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.