மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பூசாரி காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இதுபோன்று தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முடிவு கட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
"மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவரை, காவல்நிலையத்தில் வைத்து கொடூரமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் எந்த தவறும் செய்யவில்லை. அண்டை வீட்டாருடன் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட மோதல் தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் 19-ஆம் தேதி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காவல்துறையினர் தம்மை கொடூரமாகத் தாக்கியது தான் தமது உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுவதற்கு காரணம் என்று இறப்பதற்கு முன் பதிவு செய்யப்பட்ட காணொளியில் பரமசிவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவோரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குவதும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
நாகர்கோவில் கிளைச்சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளியும், தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாச்சலம் என்ற இளைஞரும் முறையே சிறைத்துறையினர், காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே மதுரை கோயில் பூசாரி பரமசிவம் உயிரிழந்தது மனித உரிமை மீறல்கள் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
ஆட்சிக்கு வந்தால் காவல் மரணங்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படும் என்று கடந்த தேர்தலின் போது த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்த பின் இதுவரை 6 காவல் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இனிவரும் காலங்களில் காவல் மரணங்கள் நடப்பதை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.
காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த பரமசிவம் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.