முதல்வரிடம் சேட்டை செய்த குட்டி போலீஸ் 
தமிழ் நாடு

முதல்வர் விஜய்யிடம் கியூட்டாக நடந்துகொண்ட குட்டி போலீஸ்!

Staff Writer

போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி, சென்னை மாநிலக் கல்லூரியில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.

முதலில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் போதை, புகையிலை இல்லாத வளாகத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார்.

பின்னர், தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் பார்த்தார்.

இதைத் தொடர்ந்து, ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற இயக்கத்தைத் தொடங்கிவைத்த முதல்வர், "போதைப்பொருள் ஒழிப்பிற்கு எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்" எனத் தொடங்கும் வாசகத்தை, மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

மேலும், மதுவிலக்குப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்த போலீசாருக்கு விருதுகளையும், போதைப்பொருள் தடுப்பு மன்றங்களில் சிறந்து விளங்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்வில், காவல்துறை அதிகாரி ஒருவரின் குழந்தைக்கு, காவல்துறை உடை அணிந்து, மேடைக்கு அழைத்து வந்திருந்தனர். அந்தக் குழந்தையை அழைத்த முதல்வர், தூக்கி கொஞ்சினார். அந்தக் குழந்தை முதலமைச்சரிடம் எந்தவித தயக்கமும் இல்லாமல் நடந்துகொண்டது, அனைவரையும் கவர்ந்ததாக இருந்தது. அவன் தன் அப்பா சொன்னதற்கு ஏற்ப, விஜய்க்கு ஒரு வணக்கம் வைக்க, அவரும் பதில்வணக்கம் செலுத்தினார்.

பிறகு, அந்தக் குழந்தை தன் இரு கைகளையும் தட்டிவிட்டதைப் போலச் செய்தது, அங்கிருந்தவர்களையும் நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தவர்களையும் கவர்ந்திழுத்தது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram