தமிழ் நாடு

சென்னையில் தேசியக் கொடியேற்றிய டி.ராஜா!

Staff Writer

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் மாநிலத் தலைமை அலுவலகங்களில் தேசியக் கொடியேற்றம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான சென்னை, தியாகராயர் நகர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் சுதந்திர தினக் கொடியை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றி வைத்து உரையாற்றினார். கட்சியின் செங்கொடியை மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஏற்றி வைத்தார். 

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன், ஜி. செல்வா, மாநிலக்குழு உறுப்பினர்கள் பா. ஜான்சி ராணி,  வெ.ராஜசேகரன்,  தோ.வில்சன், இரா.சிந்தன், க.சரவணன் முதலிய கட்சி நிர்வாகிகள் உட்பட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, நீலகண்டன் தலைமையிலான இசைக்குழுவினர் சுதந்திர தினப் பாடல்களைப் பாடினர்.

பாலன் இல்லத்தில் சுதந்திர தின விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான சென்னை தியாகராயர் நகர், செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள பாலன் இல்லத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். அகில இந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா முன்னாள் எம்.பி. தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்தியா முழுமையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்பதற்காக பூரண சுதந்திரம் வேண்டும் என முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான். சுதந்திரப் போரில் எண்ணற்ற உயிர்களை கம்யூனிஸ்ட் கட்சி ஈந்துள்ளது. ஏராளமான தோழர்கள் சிறைகளில் சித்திரவதைகளை அனுபவித்தனர். கம்யூனிஸ்ட்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் விளைந்ததுதான் இந்திய சுதந்திரம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை. அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் உள்ளது.

ஆர்எஸ்எஸ், ஒன்றிய பாஜக அரசால் நாட்டின் சுதந்திரம், இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசியல் சட்டம், பன்மைத்துவம், சமத்துவக் கோட்பாடுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பெற்ற சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். டாக்டர் அண்ணல் அம்பேத்கர் கூறியது போல நமது சுதந்திரம் அனைவருக்குமான சுதந்திரமாக அமைய வேண்டும். நாட்டின் சுதந்திரம் அனைவருக்குமான ஆனந்த சுதந்திரமாக அமைய வேண்டும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்ட நிகழ்ச்சி முடிந்தவுடன், அந்த இடத்தை தீட்டுக்கழிப்பது என்ற பெயரில் சங்பரிவார் அமைப்புகள் செயல்பட்டுள்ளன. இது அப்பட்டமான தீண்டாமை குற்றச் செயலாகும். கார்கே அவர்களுக்கு இழைக்கப்பட்ட இக்கொடுமையை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.” என்று கூறினார்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.சிவா, எஸ்.ஏழுமலை, டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, மு.வரதன், த.கு.வெங்கடேஷ் வேம்புலி, லி.உதயக்குமார், இளைஞர் பெருமன்ற மாநிலத் தலைவர் இரா.தமிழ்பெருமாள், ஐப்ஸோ மாநில துணை பொதுச் செயலாளர் பா.செந்தில், அலுவலக ஊழியர்கள் ச.லீலா மேரி, ஏ.ஷேக் அப்துல்லா, கே.சுதாகர், எஸ். லட்சுமி உட்பட ஏராளமான தோழர்கள் கலத்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.