சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகம் 
தமிழ் நாடு

கீழ்பாக்கம் மனநலக் காப்பகம் தனியாருக்குத் தாரைவார்ப்பா?... அரசு முடிவால் அதிர்ச்சி!

Staff Writer

சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள 200 ஆண்டு காலப் பழமைவாய்ந்த அரசு மனநலக் காப்பகத்தைத் தனியாரிடம் கொடுக்க முயற்சிகள் நடப்பதாகப் பிரச்னை எழுந்துள்ளது. உரிய நிதியை ஒதுக்கியும் பணியாளர்களை நியமித்தும் அரசே அதை முறையாக நடத்தவேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

அதன் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள கருத்து : 

” நிதிப்பிரச்சினை, நிதிப் பற்றாக்குறை, நிதி மேலாண்மை பிரச்சினை, நிர்வாகச் சிக்கல்கள், ஊழியர் பற்றாக்குறை போன்றவை இருக்குமானால் அதற்குக் காரணம் அரசே. அக்குறைகளைச் சரிசெய்ய முயற்சி எடுக்காமல், அந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சி கடும் கண்டனத்திற்குரியது.

அரசு மனநல மருத்துவர்களை திறமையற்றவர்கள், நிர்வாகத் திறனற்றவர்கள், சமூகப் பொறுப்பற்றவர்கள், அக்கறையற்றவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்குவது சரியல்ல. தனியார் கம்பெனி ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்பது, பொதுத்துறை மீது நடத்தப்படும் தாக்குதலாகும். மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தும் வேலையைச் செய்யாமல், போதிய நிதியை அரசு ஒதுக்கீடு செய்து, நன்கொடை வழங்க முன்வருவோரிடம் நன்கொடைகளையும் பெற்று, சென்னை அரசு மனநலக் காப்பகத்தை அரசு மேம்படுத்த வேண்டும்.

மாவட்டம் தோறும் இலவச மனநலக் காப்பகங்களை அரசு உருவாக்கிட வேண்டும். அதைவிடுத்து, மனநலம் பாதிக்கப்பட்டோரை தனியாரின் கருணையில் வாழும் அவல நிலையை உருவாக்கக் கூடாது. சுயமரியாதையில் அக்கறை கொண்ட அரசு, சுயமரியாதையுடன் மனநலம் பாதிக்கப்பட்டோர் வாழும் நிலையை உருவாக்கிட வேண்டும். உறுதி செய்திட வேண்டும்.” என்று டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram