தமிழ் நாடு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையிலிருந்து தஷ்வந்த் விடுதலை!

Staff Writer

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, அவர் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 2017ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து, கொல்லப்பட்டு பின்னர் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

குன்றத்தூரைச் சேர்ந்த தஷ்வந்த் என்பவர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும், பின்னர் பிணத்தை ஒரு பையில் எடுத்துச்சென்று அனகாபுத்தூர் அருகே உடலை தீவைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக, அவரை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தாய் சரளாவை சுத்தியலால் அடித்து கொன்றார். பின்னர் அவரது தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து போலீசார் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு, தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதை எதிர்த்து தஷ்வந்த் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது.

அந்த தீர்ப்பில், “மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதை தொடர்ந்து, சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த தீர்ப்பினைத்தொடர்ந்து புழல் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.