கோழிகள் இறப்பு 
தமிழ் நாடு

உஷார்... கடலூரில் பறவைக் காய்ச்சல்- ஆய்வகத்தில் உறுதியானது!

Staff Writer

கடலூரில் கோழிகள் கொத்துக்கொத்தாக இறந்ததற்கு பறவைக்காய்ச்சல்தான் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் இருந்த கோழிகள் ஆயிரக்கணக்கில் திடீரென தொடர்ந்து இறந்து வந்தன. குறிப்பாக, கடலூர் அருகே உள்ள கட்டியங்குப்பம், கிருஷ்ணகுப்பம், திருச்சோபுரம், நெல்லிக்குப்பம், தம்மம்பேட்டை, குறிஞ்சிப்பாடி போன்ற பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்தன.

முன்னதாக, இந்தத் திடீர் இறப்புக்குப் பறவைக் காய்ச்சல் காரணமல்ல என்றும், காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறந்த கோழிகளின் மாதிரிகள் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில், கோழிகள் இறப்புக்குப் பறவைக்காய்ச்சல்தான் காரணம் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், பறவைக்காய்ச்சலால் இறந்த கோழிகளின் பண்ணையில் மீதமிருக்கும் கோழிகளையும், கட்டியங்குப்பம், அதனைச் சுற்றியுள்ள ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகளையும் அழிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலமாக பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தவும், மேலும் பரவுவதைத் தடுக்கவும் முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram