இயற்கைச் சந்தை 
தமிழ் நாடு

சென்னையில் 2 நாள்கள் தீபாவளி இயற்கைச் சந்தை!

Staff Writer

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் சிறப்பு இயற்கைப் பொருட்கள் சந்தை சென்னையில் வரும் 19, 20 தேதிகளில் நடைபெறுகிறது. 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒவ்வொரு மாதமும் முதல், மூன்றாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கைச் சந்தை (Natural Bazaar) நடத்தப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 19.10.2024 (சனிக்கிழமை) மற்றும் 20.10.2024 (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெறவுள்ளது.

இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் புத்தம் புதிய ஆடைகள், காஞ்சிபுரம் பட்டு சேலைகள்,  சேலம் இளம்பிள்ளை சேலைகள், பட்டு வேட்டி, சட்டைகள், விருதுநகர் காட்டன் புடவைகள், அரியலூர் வாரியங்காவல் காட்டன் புடவைகள்,

கோயம்புத்தூர் நெகமம் சேலைகள், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தயாரிக்கப்படும் நைட்டிகள், ஈரோடு போர்வைகள் மற்றும் துண்டுகள், திருப்பூர் டி-சட்டைகள், இரவு ஆடைகள் போன்ற தீபாவளி பண்டிகைக்கு தேவையான அனைத்து ஆடை வகைகளும்  

இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்களும் இந்த இயற்கைச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.  

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன இயக்குநர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram