கி.வீரமணி 
தமிழ் நாடு

அரசமைப்புச் சட்டத்துக்குப் பேராபத்து - கி.வீரமணி கவலை

Staff Writer

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒழித்துக்கட்டி  மனுஸ்மிருதியைச் சட்டமாக்கும் பேராபத்துக்கான அடித்தளமே தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தம்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை :

”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்துத் தூக்கியெறிந்து மனுஸ்மிருதியை அரசியலமைப்புச் சட்டமாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் நெடுங்கால அஜெண்டாவின் செயலுருவே, நாளை (16.4.2026) கூட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படவிருக்கும் 131 ஆம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஆகும்!

மிகப் பெரிய சூழ்ச்சி

அதன் நோக்கம் மகளிருக்கான இடஒதுக்கீடு அல்ல; நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி, தென்னாட்டின் அரசியல் வலிமையைக் குறைப்பது மட்டுமல்ல; ஒட்டுமொத்தமாகவே நாட்டை ‘இந்துராஷ்டிரம்’ ஆக்கி, இந்தியாவைப் பார்ப்பனிய பாசிசப் பிடியில் நிரந்தரமாகச் சிக்க வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியாகும்.

இந்தப் படுகுழியின் ஆழத்தை உணர்ந்து தான், கடந்த ஆண்டு முதலே இதற்கெதிராகத் தமிழ்நாடு போர்க்குரல் எழுப்பி வருகிறது. தென்னாட்டு முதலமைச்சர்களை அழைத்து மாநாடு கூட்டி, இப் பிரச்சினையைக் குறித்து விவாதிக்க வகை செய்தார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நேற்று (14.4.2026) தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எழுதியுள்ள கடிதத்திலும், அனைவரும் இணைந்து போராட வேண்டிருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். கேரளம், கருநாடக அரசுகளும் இப் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டுகின்றன.

தேர்தல் தீவிரத்தில் இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களின் கவனத்தைத் திருப்பவும், இதில் போதிய கவனம் செலுத்துவதைத் தடுக்கவும் செய்யப்படும் சூழ்ச்சிதான் அவசர நாடாளுமன்றக் கூட்டம்!


எத்தனைத் தாக்குதல்கள் நம் மீது நடத்தப்பட்டாலும், எத் திசையிலிருந்து தொடுக்கப்பட்டாலும் அனைத்தையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்பதைக் காட்டத்தான் நாளை (16.4.2026) தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் அழைப்பாகும்.


தமிழ்நாட்டின் எதிர்காலத்தை, நமது உரிமைகளின் அடித்தளத்தையே பெயர்த்து அதலபாதாளத்தில் தள்ளும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இந்தச் சூழ்ச்சியை முறியடிக்க நாம் அனைவரும் களம் கண்டே ஆக வேண்டும். அறவழிப்பட்ட பெரும் உரிமைப் போரைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் நிகழ்வே நாளைய கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டமாகும். பட்டிதொட்டிகள் தொடங்கி, பெரு நகரங்கள் வரை எங்கெங்கும் கருப்புக் கொடிகள் பறக்கட்டும். உரிமைப் போரில் ஒருபோதும்  தமிழ்நாடு தலை தாழாது என்பதை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கக் கும்பலுக்கு எடுத்துரைப்போம். திராவிட இயக்கத்தின் வீச்சு என்ன... தமிழ்நாட்டின் உணர்வு என்ன என்பதை பாசிசக் கூட்டம் உணரட்டும்!” என்று கி.வீரமணி  தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.