பிளஸ் 2 பொதுத்தேர்வு 
தமிழ் நாடு

+2 தேர்வு முடிவை வெளியிடுவதில் தாமதம் செய்வதா?

Staff Writer

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என்று குழந்தைகள், ஆசிரியர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. 

குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பு இந்தக் கோரிக்கையை எழுப்பியுள்ளது. 

பொதுத்தேர்வு முடிவுகளைப் பள்ளிக்கல்வித் துறை எவ்விதத் தாமதமுமின்றி திட்டமிட்டபடி வெளியிட வேண்டும் எனத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகமும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் ஆ. மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :

”தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது உயர்கல்வி வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போதைய சூழலில், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் உயர்கல்விக்கான சேர்க்கை முறைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்களின் நலன்:

குறிப்பாக, தேசிய அளவில் நடைபெறும் நீட் (NEET), ஜே.இ.இ (JEE) மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான சி.யு.இ.டி (CUET) போன்ற நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியானவுடன், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கும். அதேபோல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயில விரும்பும் மாணவர்களும் தங்களது மதிப்பெண் விவரங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

துரிதப்படுத்த வேண்டுகோள்:

தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிறிய தாமதம் ஏற்பட்டாலும், அது மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையைப் பாதிப்பதோடு, அவர்களது எதிர்கால வாய்ப்புகளையும் கேள்விக்குறியாக்கும் அபாயம் உள்ளது.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வித்துறை செயலகம் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். விடைத்தாள் திருத்துதல் மற்றும் மதிப்பெண் பதிவேற்றம் போன்ற பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி மேற்கொண்டு, உரிய காலத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும்.” என்று மணிகண்டன் கேட்டுக்கொண்டுள்ளார்.