காவிரிப் படுகையில் கருகும் பயிர்கள் 
தமிழ் நாடு

காவிரிப் படுகையில் கருகும் பயிர்கள்- மின்சாரம் வழங்கக் கோரிக்கை!

Staff Writer

”தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில்  பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருக்கும் குறுவை பருவ நெல் பயிர்கள் போதிய அளவு தண்ணீர் பாய்ச்சப்படாததால்  கருகத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்யப்பட்ட இந்தப் பயிர்கள் கருகுவதற்கு  தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாதது தான் காரணம்.” என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 

”காவிரிப் பாசன மாவட்டங்களில் பெரும்பாலும் காவிரி நீரை மட்டுமே நம்பி நெல் சாகுபடி செய்யப்படுகிறது.  குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். நடப்பாண்டிலும் அவ்வாறு தண்ணீர்  திறக்கப்படுவது  உறுதி செய்யப் பட்டிருந்தால்  குறைந்தது  6 லட்சம் ஏக்கரில் குறுவை  பருவ நெல் நடவு செய்யப்பட்டிருக்கும்.

மேட்டூர் அணையிலிருந்து  தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில், நிலத்தடி நீரை நம்பி காவிரி பாசன மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் நெல்  நடவு செய்யப்பட்டுள்ளது.  பல இடங்களில்  ஒரு மாதத்திற்கு முன்பாகவே  நடவு செய்யப்பட்டு விட்டதால் அவை நன்றாக வளர்ந்து நிற்கின்றன. முறையாக தண்ணீர் பாய்ச்சப்பட்டால்  இன்னும் சில வாரங்களில் அவை கதிர் விடத் தொடங்கி விடும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த  சில வாரங்களாக போதிய அளவு மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால்  நீர் இறைப்பான்கள் மூலம்  நிலத்தடி நீரை பாய்ச்ச முடியாததால்,  வயல்வெளிகள் பாலம் பாலமாக வெடிக்கத்  தொடங்கியுள்ளன.  நெற்பயிர்களும் கருகத் தொடங்கியுள்ளன.  உடனடியாக தண்ணீர் பாய்ச்சப்படவில்லை என்றால்  அரும்பாடு பட்டு வளர்த்த பயிர்கள் கருகி விடும் என்ற கவலையில்  விவசாயிகள் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

விதை, நடவு, உரம், களையெடுத்தல்  ஆகியவற்றுக்காக மட்டும்  ஒரு ஏக்கருக்கு  ரூ.30 ஆயிரம் வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். இத்தகைய சூழலில்  நன்றாக வளர்த்தெடுக்கப்பட்ட நெற்பயிர்களை காப்பாற்றாவிட்டால் உழவர்களுக்கு  பெரும் இழப்பு ஏற்படும்.  பயிர்களைக் காப்பாற்ற  தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தவிர  அரசிடம் உழவர்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. உழவர்களின் எதிர்பார்ப்பு அரசால் நிறைவேற்ற முடியாதும் இல்லை.

எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்காக  ஒரு நாளைக்கு குறைந்தது  18 மணி நேரமாவது  தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், வழக்கமாக வழங்கப்படும்  குறுவைத்  தொகுப்புடன்  ரூ.5000 இடுபொருள் மானியம் வழங்கவும்  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.