”நான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை.” என கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு விளக்கம் அளித்துள்ளார்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, வரும் 23ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியிலும் அந்தக் கட்சி இறங்கியுள்ளது. இந்த நிலையில், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், தனியார் டிவி சேனலுக்கு பேட்டியளித்த தனியரசு, “நான் எடப்பாடியை சந்திக்க வில்லை. ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாக எதுவும் இதுவரை நான் பேசவில்லை. இன்னும் ஒரு சில வாரத்தில் எங்களின் கூட்டணி முடிவை அறிவிப்போம்.” என்றார்.