பழனி  
தமிழ் நாடு

பழனி மலைப் பகுதிக்கு மாலிப்டின வடிவில் ஆபத்து!

Staff Writer

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பாஜக அரசு உத்தேசித்துள்ள மாலிப்டினம் சுரங்க திட்டத்தை ரத்து செய்யவும், பழனிமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளின் இயற்கை வளங்களை தமிழக அரசு பாதுகாத்திட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”திண்டுக்கள் மாவட்டம், பழனி வட்டத்திற்குப்பட்ட நெய்க்காரப்பட்டி, கரடிக்குட்டம், சத்திரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாலிப்டினம் களிம சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. இது குறித்து வெளிவந்த செய்திகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுர கிலோ மீட்டர் (சுமார் இலட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனகிற அரிய வகை தனிமம் இருப்பதாகவும், எளிதில் துருபிடிக்காத மிகவும் உறுதித்தன்மையுடையதும், ராணும் பயன்பாட்டிற்கு உகந்ததாகவும் உள்ள இந்த மாலிப்டினம் கனிமத்தை ஒன்றிய அரசு வெட்டி எடுக்க இருப்பதாகவும் செய்திகள் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் உள்ளது.” என்று அறிக்கை ஒன்றில் அவர் கூறியுள்ளார்.

”மாலிப்டினம கனிமம் உள்ளதாக அறியப்படும் பகுதியானது பழனியை ஒட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளான இடும்பன் மலை, ஜவர் மலை ரவிமங்கலம் உள்ளிட்ட பல மலைகளும் அடங்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஐவர் மலையில் புராதன சமணப்படுகைகள் தொல்லியல் சின்னங்கள், மற்றும் உலகின் மிகப்பெரிய பல்லுயிர் தளங்கள் மற்றும் புலிகள் சரணாலயம் போன்றவை இருந்து வருகின்றன.

மாலிப்டினம் சுரங்கம் அமைக்கப்படும் பட்சத்தில், அது சாதாரணமாக அமைந்துள்ள கல்குவாரிகள், கிரானைட் குவாரிகள் போலல்லாமல் இது மிகப்பெரிய அளவில் திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேல் கொடிய தாக்கத்தை ஏற்படுத்தும். இப்பகுதி மக்களின் பிரதான தொழிலான விவசாயம் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு அந்தப்பகுதியிலுள்ள மக்கள் அகதிகளாக வெளியேற்றப்படும் நிலையும் ஏற்படும். குறிப்பாக, கொடைக்காலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைகளிள் சூழலியல் சமநிலையில் (ECOLOGICAL BALANCE) மலைப்பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு மிகப்பெரிய பாதிப்புகளை பூகோள ரீதியாக ஏற்படுத்தும். மக்களின் வாழ்நிலை மிகவும் பாதிக்கப்படும்.

மேலும், இதிகாசகாலத்துடன் தொடர்புடைய ஐவர்மலை, ரவிமங்கலம் பழனிமலை ஆகியவை பாதிப்புக்கு உள்ளாவதால், ஆன்மிக நம்பிக்கை கொண்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும். எனவே, மக்கள் நலன் காக்கும் நமது மாநில அரசு உடனடியாக ஒன்றிய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்,மக்களின் விவசாயம் மற்றும் சுற்றியுள்ள மேற்குத்தொடச்சி மலைகளையும், அங்குள்ள பல்லுயிர்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாத்திட வேண்டும்.” என்று சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்.