தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று பொது சுகாதாரம் - நோய் தடுப்புத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அத்துறையின் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் என்பது வழக்கத்திற்கு மாறானதோ அல்லது அபாயகரமான அளவிலோ இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலங்களில் தட்பவெப்பநிலை மாற்றங்களின் காரணமாக டெங்கு பாதிப்பில் பருவகால மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாகும்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 34,339 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகள் பதிவாகின, 2025ஆம் ஆண்டில் 15,688 பேர் பாதிக்கப்பட்டு, 13 உயிரிழப்புகள் பதிவாகின.
நடப்பு 2026ஆம் ஆண்டில், செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் பருவமழைக் காலங்களில் அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கொசு உற்பத்தி அதிகரிக்கக்கூடிய குழல் ஏற்படுவதால், டெங்கு பாதிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவ சிகிச்சையை விரைவாக வழங்கும் வகையில் காய்ச்சல் வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து நோயின் தீவிரத் தன்னமக்கு ஏற்ப உரிய முன்னுரிமையில் சிகிச்சை வழங்க ஏதுவாக பயிற்சி அளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
மேலும், டெங்கு பரப்பும் கொசுக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கொசுக் கட்டுப்பாடு, கொசுப்புழுக் கட்டுப்பாடு, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அகற்றுவது உட்பட்ட நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது மக்களுக்கான வேண்டுகோள்:
டெங்கு தடுப்பு, கட்டுப்பாட்டுப் பணிகளில் அரசுடன் இணைந்து செயல்படுவதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
பொதுமக்கள் தங்கள் வீடுகள், சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக, பயன்படுத்தப்படாத பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள். பூந்தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள் உட்பட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் உரிய முறையில் பராமரிக்க வேண்டும்.
வீடுகள், சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து உடனடியாக அகற்றுவதுடன், அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் கொசு ஒழிப்பு, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
காய்ச்சல் உட்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை, உரிய சிகிச்சையைப் பெறவேண்டும்." என்று பொது சுகாதாரம் - நோய்த் தடுப்புத் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.