மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டவரைவில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடம் இல்லாமல் உள்ளது; இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தி.க.தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:
“ வழக்கம்போல, பிரதமர் மோடி தலைமையில் உள்ள பா.ஜ.க. மைனாரிட்டி அரசு மக்களை இதிலும் குழப்பி, மூன்று வெவ்வேறு பிரச்சினைகளை ஒன்றாக்கி, இதன் பேராபத்தினை மக்கள் உணரவிடாமல், விஷ உருண்டை போன்று உரிமைப் பறிப்பு மசோதாவிற்கு, சர்க்கரையும், தேனையும் தடவி, ஜனநாயகப் படுகொலைக்கு வித்திட்டு – அரசியலமைப்புச் சட்ட அடிக்கட்டுமானக் கூட்டாட்சிக்கும் வேட்டு வைக்க முனைந்துவிட்டது!
1.தொகுதி மறுவரையறை என்பது வேறு;
2.மக்களவையில் இடங்களை அதிகரிப்பது வேறு;
3.மகளிர் இட ஒதுக்கீடு சட்ட அமல் என்பது வேறு.
இம்மூன்றையும் திட்டமிட்டே இணைத்துக் காட்டி, குழப்பி, ஏமாற்றி, மசோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றிட முனைப்புக் காட்டுகிறது!
மகளிருக்கு 33 சதவிகித மசோதாவை விரைந்து நிறைவேற்றிட முனைப்புக் காட்டுவதாக ஒரு தோற்றம்.
புதிய, பெரிய நாடாளுமன்றக் கட்டடத் தொடக்கத்தினையே அதில் நடத்தி, இதேபோல் ஒரு நாடகம் போட்டு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, உடனடியாக அது அமலுக்கு வராமல், வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அதை ஆக்கி வித்தைக் காட்டினார்கள்.
இப்போதும், அதனை இத்துடன் இணைத்து, சில திரைப்படங்களில் வில்லன்களை, காவல்துறையினர் பிடிக்க முனையும்போது, அவர்கள் குழந்தையை அபகரித்து மார்பில் வைத்துக் கொண்டு, மனிதக் கேடயமாக (Human Shield) காட்டித் தப்பிக்கும் காட்சி போன்றது இது – ‘‘மகளிர் மசோதாவையே – எதிர்க்கிறார்கள் எதிர்க்கட்சியினர்’’ என்று திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு, மாநில உரிமைகளை அறவே பறித்து, வரும் சில ஆண்டுகளில், முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் என்ற அதிபர் சர்வாதிகார ஆட்சி முறையை மாற்றினாரே, அதே பாணிதானே இது!
உ.பி. மாநிலத்தில் தற்போதைய மக்களவை உறுப்பினர்கள் 80. இது தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா நிறைவேறினால் 140 ஆக உயரும். மற்ற தென் மாநிலங்கள், வட, ஹிந்தி மாநிலங்களுக்கிடையே உள்ள இடைவெளி மேலும் அதிகமாகும். (வட இந்திய ஹிந்தி மக்களின் வாக்குகளை வைத்தே எளிதில் வெற்றி பெற்று ஆளும் வாய்ப்பை கைப்பற்றி விடுவார்கள்).
ஒ.பி.சி.யினரும் மசோதாவின் குறைபாட்டை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பவேண்டும்!
மகளிர் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோருக்கு மிகப்பெரிய வஞ்சகம் புகுந்திருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தினருக்கு உள்ளதுபோல், ஓபிசி சமூகத்தினருக்கு, தனி இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது என்பதால், ஓ.பி.சி.யினரும், தங்களுக்குச் சமூகநீதி வேண்டும் என்று, மசோதாவின் குறைபாட்டை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்பவேண்டும்.
தென் மாநிலங்களின் உரிமை முழக்கம், வட இந்திய ஹிந்தி ஆதிக்கவாதிகளுக்குக் கேட்கவே கேட்காது; அவர்கள் நிறைவேற்ற உள்ள இந்த மசோதா ஆர்.எஸ்.எஸ். தயாரித்த திட்டமே! இந்த உண்மை அலட்சியப்படுத்தப்பட முடியாத ஒன்று.
மாநிலங்களே இல்லாத – உரிமைகள் அற்ற – ஒற்றை ஆட்சி (Unitary State) முறைக்கு முன்னோட்டமே இது! கூட்டாட்சி முறை ஒழிப்பும் உள்ளது!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்தையும், பன்முகத் தன்மையையும் பறிக்கின்ற ஏற்பாட்டின் முகவுரை இது! புரிந்துகொள்ளுங்கள்!” என்றும் கி.வீரமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.