தமிழ் நாடு

திமுக இளைஞரணியின் அறிவுத் திருவிழா!

Staff Writer

திமுகவின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத் திருவிழா’ என்னும் நிகழ்ச்சியை முன்னெடுக்கிறது.

இந்த நிகழ்ச்சியை நாளை (சனிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணியளவில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை வெளியிட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும், முற்போக்கு புத்தகக்காட்சியையும் தொடங்கி வைக்க உள்ளார்.

‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து கட்சியின் பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார். தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள், இளைஞர் அணிச்செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் முன்னிலை வகிக்கும் இந்த விழாவில் ‘தன்மானம் காக்கும் கழகம்’ என்னும் மேடை நாடகமும் நடைபெறவுள்ளது.

இருநாள் கருத்தரங்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ என்னும் கருத்தரங்கம் 10 அமர்வுகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் என இருநாட்கள் நடைபெறவிருக்கிறது.

துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொள்கைபரப்புச்செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, சென்னை இதழியல் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோவி.லெனின், கல்வியாளர் அணி தலைவர் செந்தலை கவுதமன் ஆகியோர் தலைமை வகிக்கும் இந்த அமர்வுகளில் துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., கொள்கை பரப்புச்செயலாளர் இரா.தி.சபாபதிமோகன், மருத்துவம் அணிச்செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மாநில திட்டக்குழு செயல் துணைத்தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் கழகத்துணைப் பொதுச்செயலாளர் சே.எம்.மதிவதனி, இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்குகின்றனர்..

09.11.25 அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்தரங்க நிறைவுரை ஆற்றவுள்ளார்.

முற்போக்கு புத்தகக் காட்சி

இதையொட்டி நாளை முதல் 16.11.25 வரை நடைபெறவிருக்கும் ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யில் தினந்தோறும் புத்தர் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, கோவன் கலைக்குழு, பாப்பம்பாடி ஜமா, நிகர் கலைக்கூடம், மாற்று ஊடகமையம் கலைக்குழு ஆகிய கலைக்குழுக்களின் கலைநிகழ்ச்சிகளும் பகுத்தறிவு மேஜிக் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. 50க்கும் மேற்ப்ட்ட பதிப்பகங்களும் இதில் கலந்துகொள்கின்றன.