டீட்டா சரவணன் கைது 
தமிழ் நாடு

"கரூரிலேயே போட்டிருந்தால்..." வாய்விட்ட தி.மு.க. கவுன்சிலர் கைது!

Staff Writer

முதலமைச்சர் விஜய், கரூர் சம்பவம் குறித்து மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, தி.மு.க. கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீசார் கைது செய்தனர்.

தனியாா் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தி.மு.க. முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய போலீசார், அன்று நள்ளிரவு புழல் மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனா். அப்போது சிறை வாசலில் திரண்டிருந்த தி.மு.க. கட்சியினா், த.வெ.க. அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

அப்போது அங்கிருந்த வேலூா் மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலா் டீட்டா சரவணன், "அன்னைக்கே கரூர்ல போட்டிருந்தா, இன்னைக்கு இந்த நிலைமை வருமா?" கூறினாா். இவருடைய இந்தக் குரலுடன் கூடிய காணொலி சமூக ஊடகங்கள் முழுவதும் நேற்று பரவியது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய புழல் போலீசார், டீட்டா சரவணன் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக உறுதிசெய்தது. இதையடுத்து டீட்டா சரவணன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த புழல் போலீசார், தனிப்படைகள் அமைத்து தலைமறைவாக இருந்த அவரைத் தேடி வந்தனா்.

இன்று காலை, விழுப்புரத்தில் தலைமறைவாக இருந்த டீட்டா சரவணனைத் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram