கலகலப்புக்குப் பேர்போன தி.மு.க. மூத்த தலைவர் துரைமுருகன் இன்று வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் பெயர்க்கல்லில் மு.க.ஸ்டாலின் பெயரை மறைத்தது தொடர்பாகக் குறிப்பிட்டு, இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமானது; பெருந்தன்மை இல்லாதவர்களின் செயல் என்று குறிப்பிட்டார்.
முன்னர், அதே திட்டத்தை ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய பெயர்க்கல்லை நாங்கள் தொடக்கூட இல்லை; திட்டத்தைத் தொடங்கிவைத்தது மு.க.ஸ்டாலின்தான் என்றும் அவர் கூறினார்.
விவரம் இல்லாதவர்கள் அரசியலுக்கு வந்ததால் விவிரம் இல்லாமல் காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் துரைமுருகன் விமர்சித்தார்.
த.வெ.க.வுக்கு அரணாக இருப்போமென வைகோ கூறியதைப் பற்றி கேட்டதற்கு, அய்யய்யோ என நான்கு முறை கூறி நழுவப் பார்த்த அவரிடம், உங்கள் நண்பர்தானே என செய்தியாளர்கள் மீண்டும் கேட்க, அதனால்தான் சொல்கிறேன், வருத்தப்படுவான் என்று துரைமுருகன் கலகலப்பூட்டியபடி நழுவினார்.