பென் நிறுவனம் 
தமிழ் நாடு

மு.க.ஸ்டாலின் மருமகன் மீது பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டிய தி.மு.க. நிர்வாகி!

Staff Writer

தி.மு.க.வின் தேர்தல் தோல்விக்கு மு.க.ஸ்டாலினின் மருமகன் நிறுவிய பென் நிறுவனம்தான் முக்கிய காரணம் என்று அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் துணைச்செயலாளர் பழ.செல்வகுமார் பகிரங்கமாகச் சாடியுள்ளார். 

”பல வார அமைதிக்குப் பிறகு, நீண்ட நாட்களாக என் மனதை வருத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவெடுத்துள்ளேன். இதை எழுதுவதைத் தவிர்க்கவே இவ்வளவு காலம் முயன்றேன். இப்போதுகூட, இப்படி வெளிப்படையாகப் பேசுவதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை நான் நன்கு அறிவேன்.

இருப்பினும், காலம் கடந்துபோவதற்குள் கட்சித் தலைமை , ஓர் எளிய தொண்டனின் உண்மையான குரலைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கழகம் சந்தித்த தோல்வி, நம் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வலியையும் வேதனையையும் தந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

தேர்தல் முடிந்து 90+ நாட்கள் ஆகி விட்டது ! தோல்விக்கான உண்மையான காரணங்களைக் கட்சியால் அமைக்கப்பட்ட குழுக்களிடம் தொண்டர்கள் அனைவரும் சொன்ன ஓரே வார்த்தை "PEN"

நம் கட்சியின் தோல்விக்கான பாதையை வகுத்துக் கொடுத்த அதே பேனா... கள நிலவரத்தைத் திரித்து, தலைமைக்குத் தவறான வியூகத்தை எழுதிய அதே பேனா... தகுதியற்ற வேட்பாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை பரிந்துரைத்து நம் வெற்றியைப் பறித்த அதே பேனா...ஒவ்வொரு உண்மையான, விசுவாசமான தொண்டனின் தலையெழுத்தையும் மாற்றி எழுதி அவர்களை மீளா துயரத்தில் தள்ளிய பேனா ....

தலைமைக்கு நெருக்கமானவர்களின் கைகளில் அந்த "PEN" இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, லட்சக்கணக்கான தொண்டர்களின் எதிர்காலத்தை எழுதும் அழியாத அதிகாரம் அதற்கு வாரி வழங்கப்பட்டிருக்கிறது.

இப்படியே நீடித்தால், தொண்டர்களின் உழைப்பை உதாசீனம் செய்த இந்த பேனாவும் அந்த பேனாவால் எழுதிய கயவர்களாலும் , மிக விரைவில் கட்சி முற்றிலுமாக அழிந்து சிதைத்துவிடும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

பல உண்மைத் தொண்டர்களின் இரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்த இந்த கட்சி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் சுயநலப் போக்கால் வீழ்ந்து போவதை நாம் எவ்வாறு வேடிக்கை பார்க்க முடியும்? சுயமரியாதையையும் மனசாட்சியையும் அடகு வைத்துவிட்டு, இந்த பயணத்தை எப்படித் தொடர முடியும்?” என்று பழ. செல்வகுமார் தன் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார்.