எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

“நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி” - எடப்பாடி பழனிசாமி

Staff Writer

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

’’இங்கு நான் விவசாயிகள் பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன், எனவே அதை பற்றி மட்டும் பேசுங்கள். முதலில் போர்க்கால அடிப்படையில் ஏற்கனவே டிபிசியில் உள்ள மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அங்கு இடத்தை காலி செய்து நெல் கொள்முதல் செய்ய முடியாமல் கையாலாகாத அரசு தடுமாறுகிறது.

அதிமுக ஆட்சியில் குறுவை சாகுபடிக்கு பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை சேர்த்தோம், அதையும் இந்த அரசு செய்யத் தவறிவிட்டது. முதலில் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் 20-22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லைக் கூட கொள்முதல் செய்தோம். அமைச்சரை கேட்டால் இன்னும் அனுமதி வாங்கவில்லை என்கிறார். 17-22 சதவீதம் வரை ஈரப்பதம் இருந்தால் கொள்முதல் செய்ய வேண்டும் என்று மழைக்காலத்துக்கு முன்பே அனுமதி பெற்றிருக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி கொடுத்துவிட்டது, அதுகூட தெரியாமல் சட்டமன்றத்தில் பதில் சொல்கிறார். மற்றவர்கள் மீது பழி சுமத்தி தப்பக்கூடாது.

நான் இதை அரசியல் ஆக்கிவிட்டேன் என்கிறார்கள். எதிர்க்கட்சி என்ன அவியலா செய்யும் என்று கேட்டார் ஸ்டாலின். பிரதான எதிர்க்கட்சி என்பதால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வந்தோம். திமுக போன்று இதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. திமுகவுக்கு வேறு வழியில்லை என்பதால் சாயத்தை பூசப்பார்க்கிறார்கள். இப்போதாவது போர்க்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்து அவல நிலையைப் போக்குங்கள் என்று சொல்வதில் என்ன அரசியல் இருக்கிறது?

முதல்வர் பேட்டி கொடுக்கும்போது 3 நாட்களில் இந்த பிரச்னை தீர்ந்துவிடும் என்றார். நான் கடந்த 7ம் தேதி எனது அறிக்கையிலேயே நான் இந்த பிரச்னையைச் சுட்டிக்காட்டி இருக்கிறேன். அப்போதே வேகமாகச் செயல்பட்டிருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது, அப்போது அரசு கண்டுகொள்ளவில்லை.

அரசின் தவறு காரணமாக நெல் மணிகள் முளைத்துவிட்டது. குறிப்பிட்ட காலத்தில் நெல் கொள்முதல் செய்திருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஒவ்வொரு இடத்திலும் 30 லட்சம் மூட்டை கொள்முதல் செய்யவில்லை. திருவையாறில் மட்டும் 13 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்து டிபிசியில் அடுக்கிவைத்துள்ளனர், இன்னும் 6 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

இந்தலூர் கொள்முதல் நிலையத்தில் 12 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு எடுக்காமல் உள்ளனர், 5000 மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் இருக்கிறார்கள். இப்படி அந்தப் பகுதியில் மட்டும் 55,500 மூட்டைகள் கிடக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் காரிக்கோட்டையில் 5000 மூட்டை கொள்முதல் செய்யாமல் இருக்கிறது, ஏற்கெனவே 5000 மூட்டை கொள்முதல் செய்து அடுக்கிவைத்துள்ளனர். பேரையூரில் 10 ஆயிரம் மூட்டை கொள்முதல் செய்யாமல் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது, கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டை அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் குடோனுக்கு எடுத்துச்செல்லவில்லை.

கீழநாகையில் 5000 மூட்டை கொள்முதல் செய்யவில்லை, நெம்மேலியில் 5000 மூட்டை கொள்முதல் செய்யவில்லை. இரண்டு இடத்தில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டு 5000 முதல் 6000 மூட்டை வரை கிடப்பில் உள்ளது. டிபிசியில் இருந்து குடோனுக்கு எடுத்துச்சென்றால்தான் மேற்கொண்டு கொள்முதல் செய்ய முடியும்.

ஊடக நண்பர்கள் நேரடியாக என்னோடு வந்தீர்கள், கதறும் காட்சியைப் பார்த்தீர்கள். எல்லா குடோனிலும் உள்ளேயும் வெளியேயும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் ஒருபகுதிதான் பார்த்திருக்கிறோம். உற்பத்தியில் 55% தான் கொள்முதல் செய்துள்ளனர், 45% கொள்முதல் செய்யவில்லை. ஒருசில இடங்களில் தான் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம், ஒருசில இடத்திலேயே இத்தனை மூட்டைகள் என்றால் முழுமையாக கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?

உணவுத்துறை அமைச்சரிடம் திறந்தவெளியில் இருக்கும் மூட்டைகளை ஏன் கொள்முதல் செய்யவில்லை, கொள்முதல் செய்ததை ஏன் எடுத்துச்செல்லவில்லை என்று கேளுங்கள். இதை கொள்முதல் செய்யவில்லை என்றால் இந்த அரசு எதுக்கு இருக்கிறது. விவசாயிகள் வாழ்வாதாரமே நெல்லை நம்பித்தான் உள்ளது. வேறெந்த சோர்ஸும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விழிப்போடு செயல்படுங்கள் என்று சொன்னால் அதுக்கு ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டிருந்தால் என்ன செய்வது?

ஒட்டுமொத்தமாக இந்த அரசு, நெல் கொள்முதல் செய்வதில் தோல்வி அடைந்துவிட்டது. விவசாயிகள் நடவு செய்த பயிரைக் காப்பாற்றவில்லை. அனைத்து வகையில் இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதைத்தான் பார்க்கிறோம். இந்த அரசில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நன்மை கிடைக்காவிட்டாலும் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாத அவல நிலை இந்த ஆட்சியில் நிலவுகிறது. இனியாவது அரசு துரிதமாக செயல்பட்டு கொள்முதல் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

எங்களுடைய ஆட்சியில் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தையும் மத்திய அரசுடன் ஆலோசித்து முறையாகச் செய்தோம். இப்போது ஆட்சி யாருடையது..? அதிமுகவை விட திறமையான ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்வது மட்டும் போதாது, திறமையாக ஆட்சியை செய்துகாட்டுங்கள்…’’ என்று முடித்தார்.