தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், “மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு திமுக உள்ளது.” என்று அவர் இன்று கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து யாருடன் கூட்டணி என்ற முடிவை ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்காமல் இருந்த நிலையில், அவரின் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தை அதிமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மட்டும் பங்கேற்றிருந்தார்.
சட்டமன்றத்தில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனும் “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என கூறியிருந்தார்.
இதனிடையே, சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓ. பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அவரது மகனும், அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் உடன் சென்றிருந்தார்.
இந்த சந்திப்பிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தமிழக மக்கள் நினைப்பதை எம்.எல்.ஏ. அய்யப்பன் சொல்லியிருக்கிறார். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு திமுக உள்ளது.”என்றார்