தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” - விஜய்யின் முழுப்பேச்சு!

Staff Writer

“திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி” என்று ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது: ”பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னர் மஞ்சள் எடுத்து வைத்துதான் தொடங்குவார்கள். மங்களகரமான மஞ்சள் விளையும் பூமி தான் ஈரோடு. விவசாயத்துக்கு கவசமாக உள்ளது காளிங்கராயன் அணை.

எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களை நம்பி வந்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருப்பேன். சூழ்ச்சிக்காரர்களுக்கு தெரியாது, இது 30 வருடங்களுக்கும் மேலாக நீடிக்கின்ற உறவு. பெற்ற தாய் தரும் தைரியத்தை நண்பா, நண்பிகள், தோழர்கள், தோழிகள் தருகிறார்கள்.

நல்ல விஷயங்களை செய்துவிட்டு கதை சொன்னால் பரவாயில்லை. கதையை மட்டுமே அடித்துவிடுவது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தினால் மூன்று மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

வள்ளுவர் கோட்டத்துக்குக் காட்டும் அக்கறையை மக்கள் வாழ்வாதரத்துக்கு கொஞ்சம் காட்டுங்கள். இங்கே கவர்மெண்ட் நடத்துகிறார்களா அல்லது கண்காட்சி நடத்துகிறார்களா. மக்களைப் பத்தியே யோசிப்பதில்லை.

தமிழ்நாட்டையே திருப்பிப்போட்ட சீர்திருத்த நெம்புகோல் தந்தை பெரியார், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை முன்வைத்தவர். நம்முடைய கொள்கைத்தலைவர் அவர்.

அண்ணா, எம்ஜிஆர் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் இங்கே புகார் கூற முடியாது. நாங்கள் எங்கள் வழியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம். உங்களைத்தான் தவெக ஒரு பொருட்டே இல்லையே, ஏன் கதறுகிறீர்கள்? ஆளாளுக்கு ஏன் புலம்பித் தள்ளுகிறீர்கள்?

உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணம் தான் துணை. ஆனால் எனக்கு இந்த மாஸ்தான் துணை. பெரியார் கொள்கையை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு கொள்ளையடிக்காதீர்கள். திமுக நம் அரசியல் எதிரி. பாஜக நம் கொள்கை எதிரி. எதிரிகளை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை, களத்துக்கே சம்பந்தம் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது.

திமுக சொன்னதை செய்ததா? திமுகவும் பிரச்னைகளும் ஃபெவிகால் போட்டு ஒட்டிய ப்ரண்ட்ஸ் மாதிரி. ஒன்றிலிருந்து இன்றை பிரிக்கவே முடியாது.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விவசாயிகளுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை. இந்த மாவட்டத்துக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்தால் முட்டை தான்.

அவர்களின் இருபத்தி நான்கு மணிநேர சிந்தனையே தவெகவை எப்படி முடக்க வேண்டும் என்பதுதான்.

எந்த பிரச்னையும் தீர்க்காமல் மாடல் அரசு… மாடல் அரசு என்கிறார்கள். கூச்சமாக இல்லை. இதை கேட்டால் நம்மை விமர்சிக்கத் தொடங்கிவிடுவார்கள். நான் என்ன பேசினால் உங்களுக்கு என்ன சார்.

நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்லி அசிங்கப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என சொல்ல முடியும். அப்படியே செய்தாலும் ஓசியில் போற ஓசியில போற என சொல்வது.

என் மக்கள் மானத்தோடும் மரியாதையோடும் வாழ வேண்டும். இதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சொன்னதை நானும் சொல்கிறேன் திமுக ஒரு தீய சக்தி; தவெக ஒரு தூய சக்தி. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தான் போட்டியே. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பெரிய பலம். இன்னும் நிறையப் பேர் தவெகவில் இணையப்போகிறார்கள்.”என்றார். விஜய் பேசி முடித்ததும் அவருக்கு செங்கோலை தந்தார் செங்கோட்டையன்.