இந்தி பெயரை அழிக்கும் திமுகவினர் 
தமிழ் நாடு

ரயில்வே கல்வெட்டில் இருந்த இந்தி பெயரை அழித்த திமுகவினர்!

Staff Writer

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக கல்வெட்டில் இருந்த இந்திப் பெயரை திமுகவினர் கருப்பு மை பூசி அழித்துள்ளனர்.

புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு “ கர்தவ்ய த்வார்” என இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. “ கர்தவ்ய த்வார்” என்றால் தமிழில் “ கடமையின் நுழைவுவாயில்” என்று பொருள்.

இந்நிலையில், மத்திய பாஜக அரசு தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் இன்று (மார்ச் 4) திரண்ட திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நுழைவு வாயில் கல்வெட்டில் எழுதப்பட்டிருந்த இந்தி பெயரை கருப்பு மையால் பூசி அழித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கர்தவ்ய த்வார்” எனும் இந்தி வார்த்தையை அப்படியே தமிழிலும் எழுதியுள்ளனர். இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளனர். ஆனால், இந்தி வார்த்தையை தமிழில் மொழிபெயர்க்காமல் அப்படியே வைத்திருப்பது தவறு.

ரயில்வே துறை அதிகாரிகள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக அந்த பெயரை அகற்றிவிட்டு, தமிழில் மொழிபெயர்த்து எழுதுவதாக உறுதியளித்தனர். அவர்கள் நேரம் கேட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனர்.

மேலும் இதை சரிசெய்யாவிட்டால் நாளை மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.