திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச்செயாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவம்பர் 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும்.
திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 19 தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை மத்திய அரசு உயர்த்த மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் தொகையை காரணம் காட்டி மத்திய அரசு நிராகரித்தது உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. இதுகுறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.