நாடாளுமன்ற மக்களவை 
தமிழ் நாடு

பிஎம் உஷா திட்டத்தின் பலன்கள் என்ன?- தி.மு.க. எம்.பி.கள் கேள்வி!

Staff Writer

தமிழ்நாட்டில் பிரதான் மந்திரி உச்சாத்தர் சிக்ஷா அபியான் (பிஎம்-உஷா) திட்டத்தின் செயலாக்கம், பலன்கள் குறித்து, மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கவனம் ஈர்த்தனர்.

குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உயர்கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக, அரசாங்கம் செய்துள்ள ஆய்வுகள் குறித்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜி. செல்வம், திருவண்ணாமலை சி.என். அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளனர்.

”கடந்த மூன்று ஆண்டுகளில் பிஎம்-உஷா திட்டத்தின் கீழ் ஆதரவளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மாநிலத்தின் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதிகளின் விவரங்கள்?

பிஎம்-உஷா திட்டத்தின் தலையீடுகள் இருந்தபோதிலும், ஆசிரியர்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், டிஜிட்டல் கற்றல் வசதிகள், மாணவர் ஆதரவு சேவைகளில் தொடர்ந்து நீடிக்கும் போதாமைகளைத் தீர்க்க வழிமுறைகள் என்னென்ன?

மாநிலத்தில் பிஎம்-உஷா ஆதரவு பெற்ற கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை, வேலைவாய்ப்பில் ஏற்பட்ட மேம்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் நடத்தபட்ட மதிப்பீட்டு ஆய்வுகள் என்னென்ன?

பிஎம்-உஷா நிதியுதவியானது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மேம்படுத்தப்பட்ட கல்வித் தரம், அனைவருக்கும் உயர்தர உயர்கல்விக்கான சமமான வாய்ப்பாக அமைவதை உறுதிசெய்ய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் எவை?” என்று அவர்கள் இருவரும் கேள்வி எழுப்பினர்.