தி.மு.க. மகளிரணி ஆர்ப்பாட்டம் 
தமிழ் நாடு

700 கொலைகள், பெண்கள்மீதான 400 வன்முறைகள்- போராட்டத்தில் கனிமொழி பட்டியல்

Staff Writer

த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. மகளிரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 முதல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைத் தாங்கிய தி.மு.க. பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பேசியதாவது:

"இப்பொழுது 20-க்கும் மேல் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் த.வெ.க.வைச் சார்ந்த நிர்வாகிகள்தான். குற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எல்லாரும் த.வெ.க.வில் இணைந்துவிட்டார்கள்.

த.வெ.க. ஆட்சியில் குற்றம் செய்த த.வெ.க. நிர்வாகிகளின் பட்டியல் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது.

பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவோம் என்று கூறியவர்களின் ஆட்சியில் 700 கொலைகள், 400 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அரங்கேறி உள்ளன. இதுதான் பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவதா?

தி.மு.க. என்ன செய்கிறது என்பதை பார்க்கத்தான் காவல்துறையை வைத்திருக்கிறார்கள். ஒரு வார்த்தை தப்பாகவிட்டால் கைது செய்யவேண்டும் என்று தி.மு.க.வை கண்காணிப்பதே போலீசாரின் முழுநேர வேலையாக உள்ளது. எனவே, இந்த ஆட்சியில் பாதுகாப்பாக இருப்பதே தி.மு.க. மட்டும் தான். மற்றபடி குழந்தைகள், பெண்கள் என்று யாருக்கும் பாதுகாப்பில்லை.

பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் திரும்பி வருவதில்லை. குழந்தைகளை கடத்தி, விற்கும் இடங்களினுடைய தலைநகரமாக தமிழகம் உள்ளது என்று பத்திரிகைகளில் எழுதும் அளவிற்கு நிலை மாறியுள்ளது. இந்தியாவிலேயே விலைவாசி அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம்தான்.

இப்படிபட்ட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால், தமிழகம் இருண்ட காலத்திற்குள் சென்றுவிடும்." என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram