அரசு கடன் வாங்குவது இரண்டு மடங்காக அதிகரித்தபடி வந்திருப்பதுதான் தமிழக வரலாறு என்று தி.மு.க. முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நிதியமைச்சர் மரிய வில்சன் தலைமைச்செயலகத்தில் நேற்று தமிழக நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதைப் பற்றி தங்கம் தென்னரசு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, த.வெ.க. அரசின் சார்பில் வைக்கப்பட்ட கடன் அதிகரிப்புக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
ஜெயலலிதா, கருணாநிதி, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் எனத் தொடர்ந்துவந்த அரசாங்கங்களில் முன்னைய அரசாங்களைவிட இரண்டு மடங்கு அளவு கடன் கூடியே வந்துள்ளது என விவரங்களுடன் எடுத்துரைத்தார்.
மேலும், த.வெ.க. அரசாங்கம் வரும் 5 ஆண்டுகளில் 20 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனைப் பெறும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் காலத்தில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது என்பதால், இப்போதே த.வெ.க. அரசாங்கம் அதை முன்கூறுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
தங்களுடைய ஆட்சியின் ஆண்டு சராசரிக் கடனைவிடக் குறைவாக த.வெ.க. அரசாங்கம் கடன் வாங்கினால், தன்னுடைய பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்வதாகவும் தங்கம் தென்னரசு கூறினார்.