அமைச்சர்கள் சிவசங்கர், தங்கம் தென்னரசு, கோவி.செழியன் 
தமிழ் நாடு

404 வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறோம்! -புள்ளிவிவரத்தோடு பேசிய அமைச்சர்!

Staff Writer

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தொலைநோக்கு திட்டங்கள் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி. செழியன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

“உள்நாட்டு உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது. மின்னணு பொருள் ஏற்றுமதியில் முதலிடம், ஏற்றுமதி தயார் நிலை குறியீடு, தோல் ஜவுளி பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம். மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கைகளிலும் பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 52,514 ஆக உயர்ந்துள்ளது.

திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 40 திட்டங்கள் அரசின் பரிசீலனையில் இருக்கின்றன. மொத்தம் 404 திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் 37 திட்டங்கள் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ள முடியாதவையாக உள்ளது.

மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட தமிழ்நாடு அரசு சிறப்பாக அதனை எதிர்கொண்டுள்ளது. நான்கரை ஆண்டுகளில் பல தொலைநோக்குத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரட்டை இலக்க அளவில் வளர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையும் குறைக்கப்பட்டு நிதிப் பற்றாக்குறையும் 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தேர்வாணையங்கள் மூலம் ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. உலக அளவில் தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.10.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32.23 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

52.07 மில்லியன் டாலர் அளவுக்கு நம் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. பல நெருக்கடிகளை தாண்டி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். காலை உணவுத் திட்டம், விடியல் பயணம் திட்டம் ஆகியவை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.