மல்லை சத்யா 
தமிழ் நாடு

வைகோவுக்கு எங்கெல்லாம் சொத்து இருக்கு தெரியுமா...? புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா!

Staff Writer

செங்கல்பட்டு மாவட்டத்தில் வைகோவுக்கு ரூ.250 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக ம.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த மல்லை சத்யா பேசியதாவது: ”கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன, அதை இப்போது சொல்ல முடியாது.

திராவிட இயக்க கருத்தியலிலிருந்து பின் வாங்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.

நவம்பர் 20 ஆம் தேதி சென்னையில் புதிய கட்சி தொடங்கப்பட இருக்கிறது. கட்சியின் பெயரை முடிவு செய்ய புலவர் செவந்தியப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

15 பேர் கொண்ட குழுவினருக்கு மட்டுமே புதிய அரசியல் இயக்கத்தின் பெயர் தெரியும். திராவிட இயக்கத்தின் கொள்கையைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்.

துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது, அதனால் பாஜகவுடன் இணைந்து செயல்பட நினைக்கிறார்.

ராமதாஸ், அன்புமணியை ஏன் கட்சிக்கு அழைத்து வந்தோம் என வருத்தப்படுவதுபோல், ஒரு நாள் வைகோவும் வருத்தப்படுவார்.

அரசு அரசியல் குறித்து பக்கம் பக்கமாக பேசியவர், தனது மகனையே அரசியலுக்கு கொண்டு வந்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்டவன் நான். திமுகவில் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு இருக்கிறது, ஆனால் துரை வைகோவிடம் அவை இல்லை.

சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பவராக இருந்ததால் மதிமுக பலவீனமானது. காணாமல் போன மதிமுகவை உலகுக்குக் காட்ட பணத்தை செலவு செய்து நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் வைகோ.

வைகோவின் உறவினர் நடத்தும் மதுபான ஆலையிலிருந்து வைகோ குடும்பத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.250 கோடி மதிப்பில் சொத்து உள்ளது. 5 கோடிக்கு மேல் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று வாங்கியுள்ளனர். 10 ஏக்கரில் அரண்மனை ஒன்று கட்டியுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு யாரையும் அழைக்கவில்லை.” என்றார்.