வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 
தமிழ் நாடு

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு... டிச.11-க்குள் திருத்தம்!

Staff Writer

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதுதொடர்பான விவரங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று வெளியானது.

சென்னையில் மாநகராட்சி ஆணையரும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டனர்.

தொடர்ந்து, வாக்காளர்கள் தங்களது பெயர், விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உட்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, விவரங்களைத் திருத்த, முகவரியை மாற்ற படிவம் 6, படிவம் 7, படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6ஏ மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் இந்தப் படிவத்தைச் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் அளிக்கலாம். அதுமட்டுமின்றி, சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாள்களிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நேரில் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

மேலும், https://www.eci.gov.in/voters-services-portal என்ற இணையதளம், ECINET என்ற கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதனைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் 28ஆம் தேதிக்குள் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram