காவல்நிலையத்தில் விசாரணைக்காக இருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உடலில் காயங்கள் இருப்பது சடலக் கூராய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மதுரை, செக்கானூரணி காவல் நிலையத்தில், தான் ஓட்டிவந்த ஏலக்காய் லாரி தீப்பிடித்ததாகப் புகார் அளிக்கச் சென்றார் அதன் ஓட்டுநர் பாலகிருஷ்ணன். அவரையே காவல் நிலையத்தில் பிடித்துவைத்து விசாரித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை பாலகிருஷ்ணன் காவல்நிலையத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
பாலகிருஷ்ணனின் மனைவி, உறவினர்கள் அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறி வந்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தின் காரணமாக காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக் காவலர்கள் பழனிவேல் ராஜன், கலைச்செல்வி ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
பல்வேறு அரசியல் கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்தநிலையில், வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடல் சடலக் கூராய்வு செய்யப்பட்டது. அப்போது, அவருடைய உடலில் 5 ரத்த காயங்கள், தூக்குக் கயிறு இருந்த காயத்திற்கு அருகே ஊசியால் குத்தியது போன்ற 3 காயங்கள், முதுகிலும் காயங்கள் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருடைய மூளையில் ரத்தக்கசிவு, இதயம், நுரையீரல்களில் வீக்கம் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மதுரை கோரிப்பாளையம் சாலையில், ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உறவினர்கள் கடந்த 3 நாள்களாக சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில், காவல்துறையினருக்கும் பாலகிருஷ்ணனின் உறவினர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளு காரணமாக, காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.