முதலமைச்சர் விஜய்யின் ஆஸ்தான சோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் ஆலோசனையில் முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறதாம் எனக் கூறியுள்ள திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் அவருக்கு சில கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறியுள்ளார்.
”மாநாடு கூட்ட அரங்கமாக இருந்த தளம் இப்போது அவசர அவசரமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இப்போது தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.” என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
”மக்கள் மீதான நம்பிக்கை தான் சக்தி வாய்ந்ததே தவிர, வாஸ்து சோதிட நம்பிக்கைகள் அல்ல! என்பதை முதலமைச்சர் உணர வேண்டும். வாஸ்து அறிவியல் தானா?
வாஸ்து ஒரு போலி அறிவியல். வாஸ்துப்படி கட்டப்பட்ட வீடுகளில் தான் வெற்றியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. நிலச்சரிவு என்றால் வாஸ்து கட்டிடம், வாஸ்து பார்க்காத கட்டிடம் எல்லாமே இடிந்து விழுகின்றன.
ஆக்கபூர்வ சக்தி, எதிர்மறை சக்தி என்று வாஸ்து கூறுகிறது. அந்த சக்திகளைக் கண்டறியும் அளவிடும் கருவிகள் எதுவும் இதுவரை. கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படி அறிவியலாக எந்த சக்திகளும் இல்லை.
காலை வெய்யிலும் காற்றோட்டமும் வீட்டுக்குத் தேவை என்பது இயல்பான உண்மை. ஆனால் வாஸ்து இதை திசையை வைத்துப் பேசுகிறது. மின்சாரம், மின்விசிறி, குளிர்சாதன விஞ்ஞான வசதிகள் எதுவும் இல்லாத காலத்தில் பேசப்பட்ட கருத்துகள் இவை. இதை இப்போதும் பேசுவது அறிவியல் தானா? பல நாடுகள் கடலுக்குள்ளே கட்டிடங்கள் கட்டுகின்றனவே!
வாஸ்து நாட்டுக்கு நாடு மாறுபடுமா? சென்னையில் சூரியன் திசை ஆஸ்திரேலியாவில் மாறுபடுகிறது. அப்போது ஆஸ்திரேலியாவுக்கு தனியாக வாஸ்து இருக்கிறதா? உலக நாடுகளில் வாஸ்து பார்த்து கட்டடங்கள் கட்டப்படுவதில்லை!
பழைய காலத்தில் அடுப்புப் புகையை வெளியில் விடுவதற்கு சமையலறையை தென்கிழக்கில் வைத்தார்கள். இப்போது புகை அடுப்பு இல்லை; புகை வெளியேற்றக் கருவிகள் வந்துவிட்டன. எனவே இப்போதும் அந்தக் கருத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டுமா?
சென்னை நகரில் கடல் காற்று தெற்கு, கிழக்காக வீசுகிறது. படுக்கையறை; வரவேற்பு அறைகளை இந்த திசையை நோக்கி அமைப்பதே நல்லது. ஆனால் வாஸ்து சாஸ்திரப்படி இந்த திசையில் சமையலறை வைத்துக் கட்டுகிறார்கள். இது அறிவியல் தானா?
ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவுக்கு ஒரு வாஸ்து ஆலோசகர் இருந்தார். அவரது பெயர் வி.என்.ரெட்டி. முதலமைச்சர் அலுவலகத்துக்கு கதவு தெற்கே இருப்பது ஆபத்து! வடக்கே கதவு இருக்க வேண்டும் என்று கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று முதலமைச்சர் அலுவலகத்தின் திசையை மாற்றி அமைப்பதற்கு புதிதாக சாலையே போடவேண்டி இருந்தது. பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு சாலை போட்டும் என்.டி.ராமராவின் ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
தேவகவுடா பிரதமராக வந்தபோது பிரதமர் அலுவலகத்தில் இரண்டு படிக்கட்டு இருப்பது ஆபத்து; மூன்று படிக்கட்டுகள் வேண்டுமென்று வாஸ்து பண்டிதர்கள் கூறினார்கள். கட்டி முடிந்ததும் தேவகவுடா ஆட்சி கவிழ்ந்துவிட்டது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடற்கரையில் இருந்த கண்ணகி சிலையை இரவோடு இரவாக அகற்றினார். கண்ணகி சீற்றத்துடன் நிற்கும் சிலை அருகே தலைமைச் செயலகம் இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று வாஸ்து பண்டிதர்கள் கூறியதே காரணம். ஆனாலும் தேர்தலில் ஜெயலலிதா தோற்றார். 2006-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் அதே இடத்தில் கண்ணகி சிலையை நிறுவினார்.
வாஸ்து சாஸ்திரம் வர்ண பேதத்தையும் பேசுகிறது. பிராமணர்களுக்கு, சத்திரியர்களுக்கு, வைசியர்களுக்கு, சூத்திரர்களுக்கு தனித் தனியாக வீட்டுமனைகளை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுகிறது. அதை இப்போது பலஅடுக்கு மாடி கட்டிடம் கட்டும் ஒப்பந்தக்காரர்களால் பின்பற்ற முடியுமா? விற்பனையிலும் இதைக் கூற முடியுமா?” என்று விடுதலை ராஜேந்திரன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.