எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை மதிப்பதே இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெஞ்சல் புயலினால் நேற்று முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்த நிலையில் பல்வேறு இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் தற்போது அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தாழ்வான இடங்களில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொளத்தூர் செல்வி நகரில் பொதுமக்களை சந்தித்த அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, ”சென்னையில் இன்னும் மழை நிற்க வில்லை. மழை நின்றதும் தண்ணீர் வடிந்துவிடும். விழுப்புரத்தில் இன்னும் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அங்கு களத்தில் உள்ளனர். மின்சார பிரச்னை உள்ளதால் அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சரை அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.
எதிர்க்கட்சி தலைவரின் நேற்றைய குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'அவர் குற்றச்சாட்டை நாங்கள் மதிக்கிறதே இல்லை. கவலைப்படுவதும் இல்லை' என்றார்.
முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.