கேரள மருத்துவக் கழிவுகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலைநாட்டத்தான் திராணியில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்க்கக்கூட தெம்பில்லாத முதல்வராக இருக்கிறார்.” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் கல்லூர் பழவூர் மற்றும் அதைs சுற்றியுள்ள பகுதிகளில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை, அ.தி.மு.க.வின் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா நேரில் சென்று பார்த்தார். அதையடுத்து எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக தன் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இன்று அக்கட்சியின் தகவல்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில், எடப்பாடியின் கண்டனத்துக்குப் பிறகும் கேரள மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதாகவும் அது நிறுத்தப்படும்வரை தாங்கள் தொடர்ந்து அதைக் காட்சிப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.