சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, மக்களுடைய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டமன்றக் கட்டடத்துக்கு முன்னர் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"முதல்வர் விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் எந்தவொரு முக்கியமான அறிவிப்பும் இல்லை என்பது அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இந்த த.வெ.க. அரசால் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய முடியவில்லை. ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.
இந்த 85 நாள்களில், த.வெ.க. அரசு ஒரு புதிய திட்டத்தைக்கூட கொண்டுவரவில்லை. வெறும் வசனத்தைப் பேசியே, காலத்தை ஓட்டிவிட்டார்கள்.
வெறும் ரீல்ஸ் வெளியிடுவதும், ரீல் விடுவதுமே இந்த ஆட்சியின் சாதனை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை நிறைவேற்றுவோம் என்றும், இதுவரை எந்த ஆட்சியாளர்களும் வழங்காத திட்டங்களை மக்களுக்கு வழங்குவோம் என்றும் கூறினார்கள். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அவ்வாறான எந்தத் திட்டமும் இல்லை.
தேர்தலின்போது மகளிர் உரிமைத்தொகையை ரூ. 1000-ல் இருந்து ரூ. 2500-ஆக மாற்றுவோம், ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு ஆறு சிலிண்டர்கள் தரப்படும், முதியோர் உதவித்தொகை ரூ. 3000ஆக உயர்த்தப்படும், வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என்றும், மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ. 20,000-ஆக உயர்த்தப்படும் என்றும், மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத் தொகையாக ரூ.3600 வழங்கப்படும் போன்ற ஏராளமான சலுகைகளை அள்ளிவிட்டனர்.
ஆனால், அந்தத் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.
இன்றைய நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை உட்பட்டவைகளைச் சரிசெய்வதற்காக இந்த அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றிய எந்த விளக்கமும் அறிவிக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக ரூ. 10,98,765 கோடி கடன் உள்ளது. த.வெ.க. ஆட்சிக்கு வந்தப்பிறகு ரூ. 20,000 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
இந்த வருவாய்ப் பற்றாக்குறையைச் சரிசெய்ய குழு அமைக்கப்படும் என்று கூறுகின்றனர். அந்தக் குழு எப்படிச் செயல்படும் என்பது தொடர்பான எந்த விளக்கமும் இல்லை." என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கூறினார்.