எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

‘கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா..?’ - எடப்பாடி கேள்வி!

Staff Writer

“அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. அதனால் தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தும் நாள்கள் கூட குறைந்திருக்கிறது. இதுவே அதிமுகவின் எழுச்சி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளர் எடப்பாடி பேசியதாவது:

“கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் கூட்டணி சரியாக அமையவில்லை என்றார்கள். கூட்டணி வரும் போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது. தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுகதான். கடந்த 2021 ஆம் ஆண்டு வெறும் 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது. தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது.

இன்று டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி வசூல் கிடைக்கிறது

சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. இரண்டு நாட்கள் மட்டும் சட்டப்பேரவையை நடத்தியுள்ளார்கள். அதில் ஒரு நாள் மட்டும் எதிர்க்கட்சிகள் பேச அனுமதி. அதுவும் பிரதான எதிர்க்கட்சியான எங்களுக்கு 10 நிமிடங்கள் தான் அனுமதி. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது அதனைத் துண்டிப்பார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக் அரசே இருந்திருக்காது

200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என அக்கட்சியின் எம்.பி. கனிமொழி கூறுகிறார். இது திமுகவின் பகல் கனவு. 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியில் அமரும். எனவே, ஜனவரி மாதம் இறுதியில் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன். 2026இல் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற சூளுரைக்க வேண்டும். இப்படித்தான் நாடாளுமன்ற தேர்தலிலும் சொன்னார்கள் என்று பல பேர் நினைக்கக்கூடும். ஆனால், நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு. மக்கள் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும். 2026-ல் ஆட்சியைப் பிடிப்போம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக இருக்கும். கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா... மன்னராட்சியில்தான் இதுபோல நடக்கும். கருணாநிதி இறந்த பிறகு அவரின் மகன் ஸ்டாலின் முடிசூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசைக் கொண்டு வந்து முடிசூட்டுகிறார். தி.மு.க-வினரே நொந்து விட்டார்கள் தி.மு.க அமைச்சர்கள் முகத்தில் பிரகாசமே இல்லை.

கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால்தான் இவ்வளவு பதவிகளும் கிடைக்கும் என்ற நிலைமைக்கு தி.மு.க வந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்கள்தான் அங்கு ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும். அப்படிப்பட்டவர்கள் 2026-ல் மக்களால் மாற்றிக் காட்டப்படுவார்கள்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.