எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

அருள் விக்னேஷின் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Staff Writer

த.வெ.க. எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்து :

"மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “ எம்.எல்.ஏ. பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.

ஒரு மாவட்டத்தின் நீதியை நிலைநாட்டும் மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?

ஆட்சியரிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து சதித்திட்டம் செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது.

ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?

அகில இந்திய சேவைகள் புரியும் அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?

அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த எம்.எல்.ஏ.வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது?

மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் ?

“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் பொறுப்பு” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற முதலமைச்சரின் போலி பிம்பங்கள், அவர் கட்சி எம்.எல்.ஏ.வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்;எம்.எல்.ஏ.வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram