தென்கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம், ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பான பேச்சுவார்தை நடத்தியுள்ளதாக செய்தி வெளியானது.
இதுகுறித்து உடனடியாகப் பேசி, அந்த நிறுவனத்தின் முதலீட்டை உறுதி செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
"ஹூண்டாய் நிறுவனம், ஏற்கனவே தமிழ்நாட்டில் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முதலீடு செய்யவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது இந்நிறுவன முதலீடு நம் மாநிலத்தைவிட்டு கைவிட்டுப் போகக்கூடிய சூழல் உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் 1990-களில் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீடு செய்துவரும் நிறுவனம். ஆனால், தற்போது இன்னொரு மாநிலத்தை இந்த நிறுவனம் நாடுவதற்கான மூலக் காரணம், கைடன்ஸ் நிறுவனத்தை முறையாக நிர்வகிக்காமல் இருப்பதுதான்!
இந்த நிறுவனத்திலிருந்து 10 அதிகாரிகள் பதவி விலகிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இவையெல்லாம் முதலீடுகளை பாதிக்கும் என்பதை இந்த அரசு கொஞ்சமாவது உணர்கிறதா?
இன்றைய தொழில்துறை அமைச்சர், இன்னொரு ரீல் வெளியிட்டால் இந்த நிறுவனம் வந்துவிடும் என நினைத்தால், அப்படிப்பட்ட எண்ணத்தின் முட்டாள்தனத்தை விவரிக்க வார்த்தையே இல்லை.
உடனடியாக ஹூண்டாய் நிறுவனத்தோடு பேச்சுவார்தை நடத்தி அவர்களின் முதலீட்டை த.வெ.க. அரசு உறுதி செய்யவேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.